'அடிச்சு பெய்யும் மழை - ஆனா குடிக்க தண்ணீரில்லை' - இது கோவை கொடுமை

மாநகராட்சி - மாவட்ட நிர்வாகம் நீர் மேலாண்மையில் சரியாக இல்லாத காரணத்தாலதான் இப்போ கோடையில் தண்ணீர் பஞ்சம் வந்திருக்குது.
மேயர் கல்பனா
மேயர் கல்பனா

‘மழை பெய்யல அதனால வறட்சி!ன்னு சொன்னா அதுக்கு இயற்கையை நோகலாம் தப்பில்லை. ஆனால் கடும் மழை பெய்தும் குடிதண்ணீர் பஞ்சம்னா அதுக்கு நிர்வாக குறைபாடுதானே காரணமா இருக்க முடியும்? கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனமின்மையால குடிநீர் பஞ்சம் கொலையா கொல்லுதுங்க!’ – என்று புலம்பிக் கொட்டுகிறார்கள் கோவை மக்கள்.

கடந்த ஜூன் துவங்கி மழை, பனி எல்லாமே தீவிரமாகதான் இருந்தது தமிழகத்தில். அதிலும் கோவை மாவட்டத்தில் கேட்கவே வேண்டாம். இந்த நிலையில், கோடையும் கொளுத்தி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கோடையின் முதல் பாதியில் எல்லா மாவட்டங்களிலுமே மழை பெய்தபோது கோயமுத்தூர் மாவட்டத்தில் வெச்சு விளாசிவிட்டார் வருணபகவான். கோடை மழை அதிகமாக பெய்த மாவட்டங்களின் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறது கோவை.

இதோ இப்போது மற்ற மாவட்டங்களில் சூரியன் எக்ஸ்ட்ரா டைம் எடுத்து சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட கோவையில் காலை முதல் பிற்பகல் வரையில் கடும் வெயிலும் அதன் பின் மழை அல்லது சூடு இல்லாத மேக மூட்டம்! என்று தான் காலநிலை கருணை காட்டுகிறது மக்கள் மீது.

இயற்கை இவ்வளவு நட்புக்கரம் காட்டும் நிலையிலும் கூட கோவையில் அதிலும் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தாண்டவமாடுகிறது. சிட்டிக்குள் 15 நாட்களை தாண்டியும் தண்ணீர் வரவில்லை என்று கொதிக்கிறார்கள் மக்கள்.

“இயற்கை இந்த வருஷம் பருவ மழை மட்டுமில்லாம, கோடை மழையிலேயும் கோவைக்கு அள்ளி கொடுத்திருக்குது. ஆனாலும், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நீர் மேலாண்மையில் சரியாக இல்லாத காரணத்தாலதான் இப்போ கோடையில் தண்ணீர் பஞ்சம் வந்திருக்குது.

மாநகராட்சியிலாவது சில வார்டுகளில் லாரியில் தண்ணீர் கொடுக்கிறாங்க. அதுல நிறைய குளறுபடிகள் இருந்தாலும் ஏதோ அரை குடம் தண்ணீராச்சும் கிடைக்குது. ஆனால், புறநகர்கள் மட்டும் டெவலப்பிங் ஏரியாக்களில் அதுவும் இல்லை.

இந்த லட்சணத்துல கோவை சிட்டியில 24 மணி நேரமும் தண்ணீர் கொடுப்போம்னு சொல்லி சூயஸ் மீட்டர்னு ஒரு மீட்டரை பொருத்திட்டு இருபது நாளுக்கு ஒரு நாள் கூட நல்ல தண்ணீர் கொடுக்க தெம்பில்லை மாநகராட்சிக்கு. அதுமட்டுமில்ல, ஒரு மாசத்துல நாலு நாள் வர்ற தண்ணிக்கும் அந்த மீட்டர் பதினாலாயிரம் ரூபாய், பதினாறாயிரம் ரூபாய்னு ஓடி எங்க உயிரை வாங்குது.

இந்த சூயஸ் திட்டத்துக்காக சிட்டியில பல வார்டுகள்ள ரோடுகளை தோண்டி போட்டு எங்களை நடக்க கூட வழியில்லாமல் நாறடிச்சதுதான் மிச்சம்” என்று பொங்குகிறார்கள்.

கோடை மழை வெளுத்தும் கூட ஏன் தண்ணீர் பஞ்சம்? என்று மாநகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் கேட்க அவர்கள் மொபைலில் தொடர்பு கொண்டோம். மேயர் கல்பனா “மிக முக்கியமான மீட்டிங்ல இருக்கேன். சொல்லுங்க அல்லது விரிவா பேசணும்னா நானே அழைக்கிறேன்” என்றார். ஆனால் அழைக்கவேயில்லை.

மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளோ “சிட்டி மற்றும் புறநகரில் பெய்யும் மழையால் நிலத்தடி நீர் மட்டம் வேண்டுமானால் அதிகரிகரிக்கலாம். மக்களுக்கு குடிநீருக்கு நீர் வேண்டுமானால் அதன் ஆதார பகுதிகளான மலை வனத்தில்தான் மழை பெய்ய வேண்டும். இந்த முறை சிறுவாணி உள்ளிட்ட நீராதார பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளதுதான்.

ஆனால், இந்த கேரள அரசாங்கம் நமக்கான நீரை ஒழுங்காக தருவதில் தாவா பண்ணுகிறது. அதன் விளைவால், கையிருப்பு நீரைதான் கவனமாக பகிர்ந்து தருகிறோம்” என்கிறார்கள்.

- கோவை ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com