தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது கோவை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரம். அவர் ஓ.சி.டி. எனும் மன நல பிரச்னையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்தார் என்றால், ஏன் அவருக்கு கட்டாய ஓய்வு தரப்படவில்லை? எனும் கேள்விகளை அரசியல் தலைவர்கள் கேட்க துவங்கிவிட்டார்கள்.
குறிப்பாக, தூக்கமின்மை, தற்கொலை எண்ணம் ஆகியவற்றால் அவதிப்பட்டவர் என்னதான் அவரே விரும்பியிருந்தாலுமே கூட பணியை தொடர அனுமதித்திருக்க கூடாது.
ஆயுதங்கள் புழங்கும் துறையில் இப்படியொரு அழுத்தத்தில் அவதிப்படும் அதிகாரியை பணியில் தொடர விட்டது எப்படி? அவருக்கு கட்டாய விடுப்பு வழங்கி, ஓய்வில் மன நல சிகிச்சை எடுக்க வைத்து இருந்தால் இப்படியொரு துரதிர்ஷ்டத்தை அவர் சந்திக்காமலே கூட போயிருப்பார்’ என்கிறார்கள் அவர்கள்.
இது இப்படியிருக்க, டி.ஐ.ஜி. எப்படி தன்னை சுட்டுக் கொண்டார் என்பதை வாக்குமூலமாக தந்துள்ளார் அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ரவிச்சந்திரன்.
இந்த வழக்கை கோவை மாநகர, இராமநாதபுரம் ஸ்டேஷன் போலீஸார் தான் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் வாக்குமூலம் தந்திருக்கும் ரவிச்சந்திரன்.
இவரது வாக்குமூலத்தில், கடந்த 2016 -ம் ஆண்டு முதல் கோவை டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயகுமாரின் தனிப்பாதுகாவலராக இருந்தேன். எனக்கு கோவை மாவட்ட ஆயுதப்படையில் இருந்து 183 எண் கொண்ட 9 எம்.எம். துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. நான் 6 -ம் தேதி வியாழக்கிழமையன்று டி.ஐ.ஜி. முகாம் அலுவலக (பங்களாவின்)த்தில் பணியில் இருந்தேன். அப்போது அவர் தன் குடும்பத்துடன் வெளியே போய்விட்டு இரவு 9 மணிக்கு திரும்பினார்.
எப்போதும், அவர் காலை 7 மணிக்கு கோவை சரக ஸ்டேஷன்களின் பதிவான வழக்குகளின் டி.எஸ்.ஆர். பதிவை பார்ப்பதற்காக கீழே உள்ள அறைக்கு வருவார்.
ஆனால், சம்பவ நாளான 7 -ம் தேதியன்று காலை ஆறரை மணிக்கெல்லாம் கீழே வந்துவிட்டார். முகாம் அலுவலகத்தில் பணியிலிருந்த போலீஸ் ரவிவர்மாவிடம் குடிப்பதற்கு பால் கேட்டார். அவர் உடனே பால் காய்ச்சிக் கொடுத்தார்.
அடுத்த 10 நிமிடம் கழித்து நான் தங்கியிருக்கும் அறைக்கே வந்து டி.எஸ்.ஆர். கேட்டார். நானும் எடுத்து கொடுத்தேன். அப்போது நான் தங்கியிருந்த அறையில் வழக்கமாக துப்பாக்கி வைக்கும் இடத்திற்கு சென்று துப்பாக்கியை எடுத்தார். அதை எவ்வாறு இயக்குவது? என்று என்னிடம் பேசிக்கொண்டே அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
நான் டீ ஷர்ட் போட்டுவிட்டு வெளியே வருவதற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. நானும், முகாம் அலுவலக அறையில் இருந்த டிரைவர் அன்பழகனும் வெளியே ஓடி வந்து பார்த்தோம்.
அப்போது டி.ஐ.ஜி. விஜயகுமார், மல்லாந்த நிலையில் தலையில் ரத்த காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். துப்பாக்கியும் அவர் கையின் அருகிலேயே கிடந்தது. அவரது மனைவிக்கு தகவல் சொல்ல நாங்கள் மேலே ஓடினோம். அவர் வெளியே வந்து என்னவென்று கேட்டார், விஷயத்தை சொன்னோம். உடனே அவர் வந்து டி.ஐ.ஜி.யை பார்த்தார்.
முகாம் அலுவலகத்தில் இருந்த கார் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சுமார் 7 மணிக்கு அவரை கொண்டுவந்து சேர்த்தோம். எங்களுடன் காவலர் ஸ்ரீநாத் இருந்தார். மருத்துவமனை டாக்டர்கள் அவரை பரிசோதித்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்தேன். டி.ஐ.ஜி. எதற்காக இப்படி சுட்டிக் கொண்டார் என தெரியவில்லை” என சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் விஜயகுமாரின் மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் (பிரிவு 174) என வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது இப்படியிருக்க கோவையின் அ.தி.மு.க முகமான மாஜி அமைச்சர் வேலுமணி “தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் போலீஸாருக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
விஜயகுமார் மரணத்தில் போலீஸார் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகின்றனர். மர்மமாக உள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரணை இதில் அவசியம்” என்று கோரியுள்ளார். இதையே அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தியுள்ளார்.
- ஷக்தி