கோவை மாநகர பகுதியில் லைசென்ஸே பெறாமல் பல நிறுவனங்கள் மாநகராட்சி அல்வா கொடுத்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது.
அடபபாவிங்களா, ஏன்யா ஒரு நியாயம் அநியாயம் வேணாமாய்யா?! என்று விவேக் போல் விக்கி விக்கி வருத்தப்பட தோணுகிறது அந்த விவகாரம்.
எந்த விவகாரம் தெரியுமா?...
கோவை மாநகர பகுதியில் இருபத்து ஆறாயிரத்து நானூற்று எழுபது வரிவிதிப்புதாரர்கள் லைசென்ஸே பெறாமல் உற்பத்தி செய்து சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன! என்று வெடித்திருக்கும் தகவல்தான்.
என்ன விவகாரம் என்று கோவை மாநகராட்சியின் ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவரிடம் கேட்டபோது “அதாவதுங்க, கோவை மாநகராட்சிக்குள்ளே தொழில் நிறுவனம் நடத்துறவங்க மாநகராட்சியில முறையா விண்ணப்பிச்சு தொழில் உரிமம் அதாவது லைசென்ஸ் பெற்றுதான் ரன் பண்ணனும். இதுக்கு எல்லாருமே கார்ப்பரேஷன் ஆபீஸுக்கு வந்து கால் கடுக்க நிக்கோணும்னு அவசியமில்லைங்க. அந்தந்த வார்டுக்கு உட்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களிலேயே விண்ணப்பித்தால் அதற்குரிய கட்டணத்தை வசூலித்து, உரிமம் வழங்குற நடைமுறை இருக்குதுங்க.
ஆனால் இதுலதான் பல்வேறு முறைகேடு நடக்குதாமா. லைசென்ஸுக்கு விண்ணப்பிக்கும் தொழில் நிறுவனங்களிடம் சிலர் லஞ்சம் வாங்கிட்டு குறைந்த தொகை நிர்ணயிக்கிறதை கண்டு பிடிச்சிருக்காங்க அதிகாரிங்க. சமீபத்துல நடத்துன ஆய்வில் சொத்து வரி செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் தொழில் உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் விபரங்களை ஒப்பிட்டு பார்த்தப்ப தொழில் உரிமமே பெறாமல் பலரும் நிறுவனங்கள் நடத்துறது புரிய வந்துச்சு.
அந்த வகையில் கோவை மாநகராட்சியில் நாற்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது வணிக வரி விதிப்புகள்! 9,756 தொழிற்சாலை வரி விதிப்புகள் என 53 ஆயிரத்து 755 வரி விதிப்புகள் இருக்குது. இதுலதான் இருபத்து ஆறாயிரத்து நானூற்று எழுபது வரி விதிப்புதாரர்கள் தொழில் உரிமமே இல்லாம ஓட்டிட்டு இருக்கிறது தெரியவந்திருக்குது.
லைசென்ஸ் பெறாம இவங்க தொழிற்கூடங்களை ரன் பண்றதால மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி உள்ளிட்டவற்றை கட்டமால, நஷ்டம் ஏற்படுத்தியிருக்காங்க. ஒண்ணா ரெண்டா இருபத்தாறாயிரம் பாஸ் இருபத்தாறாயிரம்” என்று அங்கலாய்ப்பாக முடித்தார்.
நாம் இது குறித்து மாநகராட்சி உயரதிகாரிகளிடம் பேசியபோது, “லைசென்ஸ் வாங்காதவர்களின் முழு நீள பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தந்த வார்டு சுகாதார ஆய்வாளர்களிடம் ஆய்வு செய்ய கொடுத்திருக்கிறோம். மேற்படி வரி விதிப்பு கட்டிடங்கள் வணிகர் ரீதியில் பயன்படுத்தப்படுகிறதா?ன்னு செக் பண்ண சொல்லியுள்ளோம். இது முடிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்கள்.
ஒரு ஏழை குடும்பம் தண்ணீர் வரி கட்டலேண்ணா பைப் கனெக்ஷனையே பிடுங்கிடுற நிர்வாகங்களின் கண்ணில் பல்லாயிரம் பேர் லைசென்ஸே இல்லாமல் தொழிலை ஓட்டுனது பல நாட்களாக படாதது உலக அதிசயம்தான்!
-ஷக்தி