செத்த கோழி பிரியாணி துண்ணா இன்னா சவுண்டு வரும்?-கோவை கோக்குமாக்கு

நடிகர் விவேக், பிரியாணி
நடிகர் விவேக், பிரியாணி

கோவையில் இறந்த கோழிகளை வைத்து பிரியாணி மற்றும் சிக்கன் பக்கோடா உள்ளிட்டவை சமைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

காக்கா பிரியாணி துண்ணா காக்கா சவுண்டு வராம உன்னிகிருஷ்ணன் சவுண்டா வரும்? என்ற விவேக் டீம் காமெடி காலம் கடந்து இன்றும் மக்கள் மனதில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை ஊர்களில் காக்கா பிரியாணி போடுகிறார்களோ தெரியாது. ஆனால் கோவையில் செத்த கோழி பிரியாணி போடுவதாக ஒரு பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.

அதென்ன செத்த கோழி பிரியாணி?

தேசமெங்கும் கோழி கறி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையானது அதிரிபுதிரியாக பெருகியுள்ளது. இவர்களின் அகோர கோழி பசியை ஈடுகட்டுமளவுக்கு கோழிகளின் உற்பத்தி இருக்கிறதோ இல்லையோ ஆனால் நாளுக்கு நாள் சிக்கன் விலை எகிறிக் கொண்டே இருக்கிறது. தரம் பற்றி சிந்திக்கும் உணவகங்கள் சுத்தமான கோழிக்கறியை வாங்கி சமைத்து விற்கின்றனர். ஆனால் குறைந்த முதலீடு ஆனால் கொள்ளை லாபம்! எனும் ரூட்டில் போவோரோ பழைய சிக்கனை பயன்படுத்துவது, லைட்டாக கெட்டுப்போன சிக்கனை பயன்படுத்துவது என்று பகீர் ரூட் பிடிக்கின்றனர்.

இது கன்ஸ்யூமரின் வயிற்றை கண்டம் பண்ணிடாதா? என்று கேட்டால் ‘எந்த கிருமியும் அவிச்சுட்டாலோ, எண்ணெயில பொரிச்சுட்டாலோ செத்து போயிடும். அதனால அதை சாப்பிடுறவங்களுக்கு எந்த தொந்தரவும் இல்ல’ என்று புது விளக்கம் தருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட சிக்கன் உணவு விற்பனையகங்கள் பல செத்த கோழியை வாங்கி சமைப்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது. அதாவது கோவை மாவட்டம் அருகே திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது பல்லடம். இங்குதான் இந்தியாவுக்கே எக்கச்சக்கமாக சப்ளை செய்யுமளவுக்கு கோழிப்பண்ணைகள் உள்ளன.

ஒவ்வொரு பண்ணையிலும் ஆயிரக்கணக்கான கோழிகள் இருக்கின்றன. இவற்றில் தினமும் நான்கைந்து பல காரணங்களால் இறப்பது வழக்கம். இறந்த கோழிகளை பண்ணை அருகிலேயே போட்டால் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று உருவாகும் என்பதால் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த கோழிகளை எரித்து அகற்றுவதற்கு சிறப்பு எரியூட்டு அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனாலுமே கூட சில பேராசை பண்ணையாளர்கள் செத்த கோழியை குறைந்த விலைக்கு விற்று பணம் பார்ப்பது தொடர்கிறது. இவற்றை வாங்கி வரும் அசைவ உணவகத்தினர் அதை வைத்து உணவு சமைத்து விற்பதை வழக்கமாக வைத்துள்ளனராம். ஏற்கனவே இறந்து சில மணி நேரங்களான கோழிகளை சமைத்தால் அதன் மூலம் கஸ்டமர்களுக்கு சில உடல் உபாதைகள் உருவாகும் என்று பல முறை சுகாதார துறையினர் அறிவுறுத்தியும்,சில உணவக உரிமையாளர்கள் கண்டு கொள்வதில்லை. இந்த பிரச்னை இன்றும் தொடர்கிறதாம்.

நாம் சுகாதார துறை அதிகாரிகளிடம் இது பற்றி பேசியபோது “மலிவு நிலையில் கிடைக்குதே என்று இறந்த கோழிகளை வாங்கி சமைத்து விற்க கூடாது என்று பல முறை உத்தரவிடப்பட்டுள்ளது. அடிக்கடி ஆய்வு செய்து இப்படி செத்த கோழிகள் சமையலுக்காக வைக்கப்பட்டுள்ளனவா என்று சோதிக்கிறோம். சிக்குவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. எந்த தொழிலையும் மனசாட்சிப்படி செய்தாலே இந்த மாதிரியான தவறுகள் நடக்காது” என்கிறார்.

மனசாட்சியா அப்டின்னா சார்?

-ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com