கோவை அருகே சந்தையில் கார் மோதி 3 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தையில் நின்று தக்காளி விலை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! திடீரென பெரும் சப்தம், அலறல்கள், பரபரப்புகள்.அடுத்த சில நொடிகள் கழித்து ஏதோ ஒரு பிசுபிசுப்பு உணர்வுடன் குனிந்து கீழே பார்க்கிறீர்கள்…நசுங்கி, செக்கச் சிவப்பாய் காட்சியளிக்கிறது. தக்காளி அல்ல உங்கள் கால் விரல்களில் சில.
எப்படி இருக்கும்?
அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது கோவை சிட்டியின் விளிம்பு பகுதியான வடவள்ளியில்.
சென்னைக்கு நிகராக ‘துணை நகரம் வேண்டும்’ எனும் கோரிக்கை எழுமளவுக்கு விறுவிறுவென வளர்ந்து வருகிறது கோவை. இதில் சிட்டி சுற்றுவட்டாரத்தில் ரேபிட் வேகத்தில் வளரும் பகுதிதான் வடவள்ளி. மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள், ஹைடெக் அடுக்குமாடி குடியிருப்புகள், ஷாப்பிங் ஏரியாக்கள், வளம் கொழிக்கும் வர்த்தக அமைப்புகள், உலகப்புகழ் மருதமலை முருகன் கோவில் என்று மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் மட்டுமில்லாமல் அடர் வனமும், இரவில் அலைபாயும் காட்டு யானைகளும் பின்னிப் பிணைந்த வித்தியாசமான பிரதேசம் இது.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வடவள்ளி பேருந்து நிலையத்தை சுற்றி மெயின் ரோட்டில் வாரச்சந்தை அமைக்கப்படுவது வழக்கம். சுண்டக்காய் முதல் சர்வ சுத்தமான நெத்திலி கருவாடு வரை தினசரி தேவைக்கான உணவு விஷயங்கள் அத்தனையும் மிக ஃப்ரெஷ்ஷாக இங்கிருக்கும் தற்காலிக கடைகளில் கிடைக்கும். அதனால்தான் சிட்டியின் ஏதேதோ பகுதிகளில் இருந்து இந்த சந்தைக்கு படையெடுப்போர் ஏராளம்.
குறிப்பாக கோவை வடக்கு கோவை பகுதிகளில் வேலை ரீதியாக செட்டிலாகியுள்ள வட மாநில நபர்கள் ஊட்டி உருளைக்கிழங்கு கேட்டு குவிவது இந்த சந்தையில்தான். அதனால் இங்கே திரும்பிய திசையெல்லாம் ‘ஏக் காவ் மேம் ஏக் கிஸான் ரஹ்தாத்தா’ என்று எக்கச்சக்கமாய் ஹிந்திவாலாக்களின் சத்தமாக இருக்கும். என்னதான் இது திமுகவின் திராவிட மாடல் ஆட்சியாக இருந்தாலுமே கூட ஆலு கேட்டு குவியும் வட்டக்கன்ஸை பார்த்து ஒரு வியாபாரி கூட ‘இந்தி தெரியாது போடா’ என்று சொல்வதேயில்லை அதற்கு பதிலாக ‘இந்தி தெரியும் வாய்யா’ என்றுதான் அழைப்பார்கள். காரணம், வியாபாரம் அந்தளவுக்கு சூடு.
சரி, மெயின் மேட்டருக்கு வருவோமா. இந்த சந்தையில் எல்லாமே சிறப்புதான் என்றாலுமே கூட மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால் இடவசதிதான். வடவள்ளி பேருந்து நிலையமே அங்குதான் இருக்கிறது என்பதால் கனரக வாகனங்களின் மூவ்மெண்ட்ஸ் இங்கே அதிகம் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. நொடிக்கு பத்து வாகனங்கள் கிராஸ் செய்யும் இந்த பகுதியில் எப்படி இவ்வளவு ஜனநெருக்கடியுடன் கூடிய சந்தையை காவல்துறையும், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கிறது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. வாகன ஓட்டிகள் கொஞ்சம் கவனம் பிசகினாலோ அல்லது காய்கறி வாங்க வந்தவர்கள் சற்றே அலட்சியமாய் நடந்தாலோ விபத்து சத்தியம்!
இதை பல முறை பொதுநல செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியும் யாருமே திருந்திய பாடில்லை. இந்த சந்தைக்கான வரவேற்பை பாத்துவிட்டு வாராவாரம் கடைகளின் எண்ணிக்கை எகிறிக் கொண்டே போகிறது.
இந்த நிலையில், அந்த அசம்பாவிதம் கடந்த 13ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தேவிட்டது. லிங்கனூர் பகுதியை சேர்ந்த கனிராஜ் என்பவர் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் இந்த சந்தைச் சாலையின் வழியே வர, ஒரு இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கடைகளில் நுழைந்து, காய்கறிகளை நசுக்கியதோடு ஒரு பாட்டி உட்பட மூன்று பேர் மீது மோதிவிட்டது. பாட்டிக்கு காலில் சிறு காயம் ஆனால் மீதி இரண்டு வட மாநில நபர்களுக்கு பலத்த காயம்தான். காரின் வேகம் இன்னும் அதிகமாக இருந்திருந்தால் அசம்பாவிதம் பெரிய அளவுக்கு போய் உயிரிழப்புகள் நிச்சயம் நிகழ்ந்திருக்கும்! என்கிறார்கள் அப்பகுதியில் கடை வைத்துள்ளோர்.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் சமூக செயற்பாட்டாளர்கள் “வடவள்ளியில் ஞாயிறு வார சந்தை அமைந்திருக்கும் விதம் மிக மோசமானது! என்று பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுவிட்டது. இந்த அமைப்பினால் கடைக்காரர்கள், வாங்க வருவோர், வாகன ஓட்டிகள் என அத்தனை தரப்பு நபர்களுக்கும் ரிஸ்க் அதிகம். இதற்கு பாதுகாப்பான மாற்றி அமைப்பு செய்ய வேண்டும் என்று பல முறை போலீஸிடம் கூறியும் கண்டு கொள்வதில்லை. இப்போது ரத்தம் பார்த்தாகிவிட்டது, இனியாவது அதிகாரத்தில் உள்ளோர் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உயிர்பலிகள் உறுதி!
வடவள்ளி என்று இல்லை மாவட்டம் முழுக்கவே இப்படித்தான் தற்காலிக சந்தைகளும், சாலையோர கடைகளும் மிக ஆபத்தான முறையில் அமைந்துள்ளன. போலீஸும், வருவாய்துறையும் இதை தட்டிக்கேட்பதே இல்லை. காரணம் ஒவ்வொரு கடையிலிருந்து ‘கவனிப்பு’வருவதே! என்கிறார்கள்.
உயிரை விடவா கவனிப்பு பெருசு? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்” என்கிறார்கள்.
இனியாச்சும் மாறுவாங்களா?
-ஷக்தி