கோவையில் பழைய இரும்பு கடையில் இருந்த தீ அணைப்பான் வெடித்து ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவன் கால் முறிந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் பழைய இரும்புக்கடை உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பழைய இரும்பு பொருட்கள் வாங்கப்பட்டு மொத்தமாக சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடையில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பான் உருளை திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் அருண் என்பவர் மீது உருளை விழுந்து கால் இரண்டாக முறிந்துள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் சென்ற கல்லூரி மாணவர் மீது தீயணைப்பான் உருளை விழுந்து கால் முறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.