சிவகங்கை: 11ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை - சகமாணவர்களே சிக்கிய அதிர்ச்சி பின்னணி

சிவகங்கை அருகே 11ம் வகுப்பு மாணவனை சகமாணவர்களே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமுருகன்
திருமுருகன்

சிவகங்கை அருகே சாத்தரசன் கோட்டையை சேர்ந்தவர் செல்வகண்ணன். இவரது மகன் திருமுருகன். இவர் மல்லல் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

இவருக்கும், அதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் ஜெயக்கண்ணன் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊரில் வாலிபால் விளையாடுவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது மரக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே திருமுருகனுக்கும், ஜெயக்கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ஜெயக்கண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருமுருகனை சரமாரியாக அரிவாளால் தலையிலும், கழுத்திலும் சரமாரியாக வெட்டி வீழ்த்தி உள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த திருமுருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் திருமுருகன் உயிரிழந்தார்.

இதுகுறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருமுருகனை வெட்டிக்கொலை செய்த 4 பேரும் சிவகங்கை பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பதால் இந்த சம்பவம் சகமாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com