தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.
காலை 10 மணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படுகிறது.
2022-23 ஆம் கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 மாணவர்கள் எழுதி உள்ளார்கள். அதேபோல 11ஆம் வகுப்பு பொது தேர்வினை 8 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் எழுதி உள்ளார்கள். இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.
தேர்வு எழுதிய மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக ரிசல்ட்டை தெரிந்துகொள்ளலாம். மேலும், மாணவர்களின் கைபேசி எண்களுக்கு குறுந்செய்திகள் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிகல்வித்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும். மேலும், மாணவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres)அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.
தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்படவுள்ளது.