நாகையில் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெண் காப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வெளிநாட்டு நிறுவனத்தின் நிதி உதவியுடன் நாகையில் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் சீர்காழியைச் சேர்ந்த சசிகலா [45] என்ற பெண் காப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த காப்பகத்தில் சுனாமியால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் தாய், தந்தையரை இழந்த குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர். இதில் 20 குழந்தைகளுக்கு ஒரு காப்பாளர் என்றபடி பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த காப்பகத்தில் தங்கி 7ம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுவனுக்கு அவனது காப்பாளரான சசிகலா இரவு நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் தூக்கம் இல்லாமல் தவித்த சிறுவன் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளான். பல நாள்கள் இந்த சித்ரவதையினால் தவித்த சிறுவன் ஒருநாள் தாங்க முடியாத வேதனையுடன் இது குறித்து காப்பக உரிமையாளரிடம் கண்ணீர்விட்டு கதறியுள்ளான்.
இதுதொடர்பாக காப்பக உரிமையாளர் சசிகலாவை கண்டித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து சிறுவனுக்கு சசிகலா பாலியால் ரீதியாக டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
இதுதொடரவே காப்பக நிர்வாகி இதுகுறித்து வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார் சசிகலாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசாரிடம் பேசியபோது ‘புகாரின்பேரில் சசிகலாவை கைது செய்துவிட்டோம். அந்த காப்பகத்தின் பெயரோ, அந்த சிறுவனது பெயரோ, கைது செய்யப்பட்ட சசிகலாவின் புகைப்படத்தையோ நாங்கள் வெளியிடக் கூடாது’ என்று கூறி இணைப்பை துண்டித்துக்கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகையில் இதேபோல் வேறொரு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்.விவேக் ஆனந்தன்