கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லோகநாயகி என்பவருக்கும், தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இயற்கையின் மீது ஆறாத பற்று கொண்ட மாதேஷ், அவரது விலை நிலங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்வதும், அதேபோல இயற்கையாக மருந்து மாத்திரைகள் உட்கொள்ளாமல், தானாகவே சிகிச்சை முறைகள் மேற்கொள்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து இயற்கை மீது பற்றான மாதேஷ் தனது மனைவி கர்பம் தரித்ததும் தனது மனைவிக்கு மருந்து மற்றும் தடுப்பூசிகள் போடாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் மாதேஷின் மனைவி லோகநாயகி கர்ப்பமாக இருப்பது தெரிந்து அங்கிருந்த கிராம செவிலியர் தாமாக முன்வந்து அரசு பதிவேட்டில் லோகநாயகி கர்பமாக இருந்ததை பதிவேற்றம் செய்துள்ளார்.
பின்னர் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினரின் தொல்லை தாங்காமல், மனைவியின் சொந்த ஊரான புளியம்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளார் மாதேஷ். இங்கு யாருக்கும் தெரியாமல் மனைவிக்கு இயற்கையான முறையில், அவருக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சத்துக்களுக்கு தேவையான காய்கள் மற்றும் கீரைகளை கொடுத்து மட்டுமே வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்படவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்க்க ஏற்பாடுகளை செய்துள்ளார் மாதேஷ். பின்னர் இன்று விடியற்காலை சுமார் 4 மணி அளவில் லோகநாயகிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீண்ட நேரமாகியும் குழந்தை பிறந்த பின்னர் தாயின் வயிற்றில் இருந்து நச்சுக்கொடி வெளியே வராமல் இருந்துள்ளது. இதில் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழக்க தொடங்கியுள்ளார் லோகநாயகி.
பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்பொழுது லோகநாயகியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறிய நிலையில் பின்னர் இறந்த தனது மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் அவர்கள் ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சுகாதார ஆய்வாளர் சசிகுமார் போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் பெருகோபனபள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராதிகா கொடுத்த புகாரின் பேரில் தற்பொழுது போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியின் பிரசவத்தை அலட்சியமாக எண்ணி யூட்யூப் மூலம் இயற்கை அலுவலர் என்ற பெயரில் பிரசவம் பார்த்த மாதேஷின் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- பொய்கை.கோ.கிருஷ்ணா