‘செவிலியர் தூங்கியதால் குழந்தை உயிரிழப்பு?’ - அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

‘செவிலியர் தூங்கியதால் குழந்தை உயிரிழந்துவிட்டது’ என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குழந்தையுடன் உறவினர்கள்
குழந்தையுடன் உறவினர்கள்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் பாளையம்புதூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளுக்கு அவசர சிகிச்சை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு பரிசோதனைகள், பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பல சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த 28ம் தேதி ஊத்துப்பள்ளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மனைவி ஆனந்தி் பிரசவத்திற்காக பாளையம் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினமே அவருக்கு பெண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்துள்ளது. ஆனாலும் 2 நாள் மருத்துவமனையில் இருந்துவிட்டு போகுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் தாயும், சேயும் சுகாதார நிலையத்திலேயே இருந்துள்ளனர். நேற்று குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், சுமார் இரவு 11.30 மணி அளவில் குழந்தைக்கு அதிகளவில் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மருத்துவமனையில் ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டும் பணியில் இருந்துள்ளனர். அவர்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செவிலியர்களின் அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குழந்தைக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டவுடன் உறவினர்கள் செவிலியர்களை அழைக்க முயன்றுள்ளனர். அப்போது, அறை பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் எழுப்ப முடியாமல் போயுள்ளது.

அதே சமயம் மருத்துவமனையின் வெளிக்கதவுகளும் பூட்டப்பட்டு இருந்தால் மருத்துவமனையை விட்டும் வெளியில் செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு உள்ளேயே சிக்கித் தவித்துள்ளனர்.

இவ்வாறாக நீண்ட நேரமாக போராடியும் செவிலியர்களை அழைக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், சுமார் அதிகாலை 3.30 மணி அளவில் பச்சிளம் குழந்தை உயிரிழந்துள்ளது.

இதைத்தொடர்ந்து உறவினர்கள் இன்று காலை மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தொப்பூர் காவல்துறையினர் நேரில் வந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சம்பந்தப்பட்ட செவிலியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, பெண் குழந்தையின் சடலத்தை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள 6 ஊராட்சிகள் மற்றும் 17 கிராமங்களுக்கான அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இரவு பணியாற்றுவதில்லை.

ஒரு செவிலியர் மட்டும் இருக்கிறார். அவரும் இரவு நேரத்தில் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு தூங்குவதால், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது’ என்றனர்.

பொய்கை.கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com