தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை - புதுநத்தம் சாலையில் ரூ.134 கோடி செலவில் 6 தளங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘சொன்னது மட்டும் இல்லாமல் சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் அமைக்கப்பட்ட மருத்துவமனையும், மதுரையில் அமைக்கப்பட்டு இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகமும்.
இவை இரண்டுமே தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்படாத வாக்குறுதிகள். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றால், கலை நகராக திகழ்வது மதுரை தான்.
தலைநகர் சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டில், ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’ கலைஞர் கருணாநிதி அமைத்தார். இன்று கலைஞரின் நூற்றாண்டில் கலைநகர் மதுரையில் ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ என்ற தென்தமிழ்நாட்டின் அறிவாலயத்தை இந்த அடியேன் அமைத்துள்ளேன். இந்த நூலகத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என்று நான் அடிக்கடி சொல்வது கல்வியும், சுகாதாரமும்தான். கண்ணகி எரித்த மதுரையில் இனிமேல் அறிவு தீ பரவ போகிறது.
தி.மு.க என்பது அரசியல் இயக்கம் மட்டும் இல்லை. அறிவு இயக்கமும் ஆகும். படிப்பு மட்டும் தான் யாராலுமே திருட முடியாத ஒரே சொத்து. ஒரு இனத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி தான் முக்கியம்’ என்றார்.