தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்.
முதலில் இந்த திட்டம் சென்னை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தொடங்கப்படும்.பின்னர் படிப்படியாக அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” என்றும் அறிவித்தார். அந்த வகையில் முதற்கட்டமாக மாநகராட்சிகள் , நகராட்சிகள், தொலைதூர கிராம பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதனை கடந்த 2022ம் வருடம் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாளில் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்த திட்டம் மார்ச் 1ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டு 1.14 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்ட்த்திற்கு தற்போது 33.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த சமூக நலம், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலானன கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட்டு 16 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் இதற்கென ரூ.404 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 1ம்தேதி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு விரிவாக்கத்திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சர் பள்ளிக்கு வந்ததும் மாணவ, மாணவிகள் ஓடிச்சென்று வணக்கம் சொல்லி அவரை அழைத்துவந்தனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமையறைக்கு சென்று அங்கு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை பார்வையிட்டார். அத்துடன் வரிசையாக அமர்ந்திருந்த மாணவ, மாணவியர்களுக்கு முதல்வர் ஸ்டாலினே உணவு பரிமாறினார். அதன்பின்பு தானும் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது தனது அருகே அமர்ந்திருந்த மாணவ, மாணவியிடம், ‘நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? என் பெயர் என்ன? என்று தெரியுமா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் ’நீங்கள் தமிழ்நாடு முதலமைச்சர். உங்கள் பெயர் ஸ்டாலின்’ என்று மழலைமொழியில் சொல்ல அதனைக்கேட்டு உளமகிழ்ந்தார். அத்துடன் அந்த குழந்தைகளிடம் ’அதை எடுத்து சாப்பிடு, இதை எடுத்துச்சாப்பிடு, உடம்புக்கு நல்லது’ என்றபடி ஆலோசனையும் கூறினார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி நாகை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இன்று பிற்பகல் சட்டம் ஒழுங்கு தொடர்பான அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ரிவ்யூ மீட்டிங்கிலும் கலந்து கொள்கிறார். மாலை திருவாரூர் செல்பவர் மறுநாள் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி செல்வராஜின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டுவிட்டு திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கள் குல தெய்வமான திருக்குவளையில் உள்ள அங்காளம்மன் கோவிலில் வழிபட்டார். அப்போது அதனை படம் பிடித்தவர்கள் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி காட்சியை படம் பிடிக்கவும், செய்தி சேகரிக்கவும் பத்திரிக்கையாளர்கள் யாரையும் பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. அந்த பள்ளியின் 1ம் வகுப்பு ஆசிரியர் ஒருவரும் தன்னை பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என்று புலம்பியபடி இருந்தார்.
-ஆர்.விவேக் ஆனந்தன்