தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த ஆடியோவில் தி.மு.க குறித்து விமர்சனங்கள் இடம் பெற்று இருந்த நிலையில் ‘அந்த ஆடியோ பொய்யானது’ என்று, பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்து இருந்தார். இந்த பரபரப்பான சூழலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில் ‘தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் நடக்கிறது. இதில் யாருக்கும் விளம்பரம் தேடி கொடுக்க விரும்பவில்லை’ என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், ‘மக்களுக்கான பணிகளைச் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. ஆடியோ விவகாரம் தொடர்பாக பழனிவேல் தியாகராஜன் 2 முறை விளக்கம் அளித்துள்ளார்’ என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.