‘பா.ஜ.க மீண்டும் வந்தால் தமிழ்நாடே இல்லாமல் போகும்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

‘பா.ஜ.க மீண்டும் வந்தால் தமிழ்நாடே இல்லாமல் போகும்’ என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மோடி, ஸ்டாலின்
மோடி, ஸ்டாலின்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவாக திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 7000 சதுர அடி பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் திருவாரூர் ஆழித்தேர்போல கலைஞர் கோட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் திருமண அரங்குகள், அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்த கலைஞர் கோட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் துணை முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘கலைஞருக்கு திருவாரூரில் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. 'ஓடி வந்த பெண்ணே கேள் நீ தேடிவந்த கோழை உள்ள நாடு இதுவல்ல' என்று 13 வயதில் எந்த திருவாரூர் வீதிகளில் போர் பரணி பாடி வந்தாரோ? அதே திருவாரூரில் கலைஞருக்கு கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது.

அண்ணாவை கலைஞர் முதன்முதலாக சந்தித்த ஊர் திருவாரூர். பின் நாட்களில் தலைவனாக ஆனவர் அல்ல கலைஞர். அவர் தலைவனாகவே பிறந்தவர். அதற்கு அடித்தளமாக அமைந்த ஊர்தான் திருவாரூர்.

மன்னர்கள்கூட தாங்கள் ஆளும்போது கோட்டமும், கோட்டையும் கட்டுவார்கள். கலைஞர் இன்னமும் வாழ்கிறார். இன்னமும் ஆள்கிறார் என்பதன் அடையாளமாக தான் இந்த கம்பீரத்தோடு கோட்டம் அமைந்து இருக்கிறது.

எனது தாயார் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் இந்த கோட்டம் கட்டப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரையில் எனது தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்பு கோட்டையாகவே நான் இதை கருதுகிறேன்.

திருவாரூர் தேர் அழகு என்பார்கள். அதே உருவில்தான் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திராவிட மாடல் ஆட்சியை கலைஞருக்கு காணிக்கை ஆக்குகிறேன்.

நானும், சகோதரி செல்வியும் நிலத்தை வாங்கி தற்போது கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. சிரமங்களுக்கு பிறகு கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு உதவிய அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நன்றி.

பா.ஜ.க கடந்த 10 ஆண்டுகளாக பரப்பி வருகிற சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்க வேண்டும். பா.ஜ.க-வை மீண்டும் ஆள அனுமதித்தால் தமிழ்நாடே இல்லாமல் போய்விடும்.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவும் இல்லாமல்போகும். ஜனநாயக போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக பாட்னாவில் நடக்கும் ஜனநாயக மாநாட்டில் பங்கேற்க உள்ளேன்.

மீண்டும் பா.ஜ.க-வை ஆட்சி செய்ய அனுமதித்தால் 4 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ்நாடு இல்லாமல் போகும். தமிழ்நாட்டைப் போல் இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணி ஒற்றுமையாக இருப்பது அவசியம்.

வருகின்ற பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஒற்றுமை வேண்டும். இதன் முன்னோட்டமாகத்தான் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஜனநாயக மாநாடு நடைபெற உள்ளது’ என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com