சென்னை: தனியாக கழன்று சென்ற ரயில் பெட்டிகளால் போக்குவரத்து பாதிப்பு - மாற்று பாதையில் இயக்கம்
சென்னை, சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயிலிலிருந்த 4 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அச்சத்திற்குள்ளாகினர். அதிகாலை நடந்த இச்சம்பவத்தால் சென்னை கடற்கரை- தாம்பரம் வரையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. தாம்பரம் செல்லும் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் கல்லூரி, அலுவலகம் மற்றும் இதர பணிகளுக்கு செல்லும் பயணிகள் பணிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி ரயிலிலிருந்து திடீரென கழன்ற 4 பெட்டிகளையும் அங்கிருந்து இழுத்து சென்று சரி செய்த நிலையில் ரயில் போக்குவரத்து சீரானது. சுமார் இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பின் மின்சார ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. தற்போது 4வது நடைமேடை வாயிலாக தாம்பரம் செல்லும் ரெயில்களும், 2வது நடைமேடை வாயிலாக செங்கல்பட்டு செல்லும் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.