சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து ஓன்றரை கோடி தங்கத்தை கடத்தி வந்த 3 பயணிகளிடம் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து வந்த ஆண் பயணியை சோதனை செய்த போது 49 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 919 கிராம் தங்கம் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும், அபுதாபியிலிருந்து வந்த ஆண் பயணியிடம் சோதனை செய்த போது ₹42 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள 792 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமில்லாமல், குவைத்திலிருந்து வந்த பெண் பயணியை சோதித்த போதும் ₹43 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 805 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பயணிகளிடம் இருந்து ஒரு கோடியே 4 லட்சத்து 96 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 516 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தல் செய்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.