சிறு தொழில் செய்ய வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, பொது மக்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த மகாதேவ் பிரசாத். அவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இருவரும் அப்பகுதியைச் சேர்ந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்களிடம், சிறு தொழில் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகக் கூறியுள்ளனர். மகாதேவ் பிரசாத் திமுகவில் 184-வது வார்டு இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இதனை நம்பி பல பெண்கள் முதலீடு செய்துள்ளனர். அதன்படி கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட உணவு தானியங்களை பாக்கெட் செய்து கொடுத்தால், ஒரு பாக்கெட்டிற்கு 2 ரூபாய் கொடுக்கப்படும் என்றும் இதற்கு முன் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய பொதுமக்கள் ஏராளமானோர், மகாதேவ் பிரசாத் நடத்தி வரும் மோகா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் அதிகமான பெண்களிடம் 25 ஆயிரம் ரூபாய் முன்பணமாகப் பெற்றுள்ளனர். பின்னர் மகாதேவ பிரசாத் தம்பதி முதலீடு செய்த பெண்களிடம் சிறு தானியங்களைக் கொடுத்து பொட்டலம் செய்து தரும் படியும், அவற்றுக்கு மாத ஊதியமாக 5 ஆயிரம் முதல் 10 ரூபாய் வரை தருவதாகவும் கூறியுள்ளனர்.
இரண்டு மாதங்கள் வேலை பார்த்த பின்பு அதற்கான ஊதியம் தராமல், கொடுத்த முன்பணம் பலகோடி ரூபாயைச் சுருட்டிக்கொண்டு மகாதேவ பிரசாத்தும், அவரது மனைவியும் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் அரும்பாக்கம் காவல் நிலையம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மகாதேவ பிரசாத் வீட்டை காலி செய்வதாகப் பாதிக்கப்பட்டோருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது அங்கு வீட்டை காலி செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்களைப் பிடித்து அரும்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்த பாதிக்கப்பட்டவர்கள் அரும்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறு தொழில் செய்ய வாய்ப்பு அளிப்பதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.1,25,00,000க்கும் மேற்பட்ட பணத்தை வசூலித்து ஏமாற்றி ஓடிய தி.மு.க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.