தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, மதுரை, திருச்சி, தேனி, உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களிலும், தமிழகத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா(PFI) அமைப்புக்கு தொடர்புடைய 10 இடங்களிலும் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலும், என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் இந்த திடீர் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை திருவொற்றியூரில் அப்துல் ரசாக் என்பவரது வீட்டில் 6 பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பழனி நேதாஜி நகரில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம் கம்பத்தில் எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி என்பவர் வீட்டில் 3 பேர் கொண்ட குழு சோதனை மேற்கொண்டு வருகிறது. நெல்பேட்டையில் பிஎஃப்ஐ தடை வழக்கு மற்றும் நிதிப்பரிமாற்றம் தொடர்பாக, பிஎஃப்ஐ முன்னாள் நிர்வாகியான அப்பாஸ் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. மேலும் வெளிநாட்டிலிருந்து இருந்து திருச்சி வந்த முகமது அசாப் என்பவரிடம் விமான நிலையத்தில் வைத்தே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் காலை முதலே பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.