சென்னை: தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசு சலுகைகள் - உயர் நீதிமன்றம் உத்தரவு

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கலாம்
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவருக்கான சீருடை, பாட புத்தகங்களுக்கான கட்டணங்களையும் வழங்க வேண்டியது அரசின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, புவனேஸ்வரிபேட்டையில் உள்ள லிட்டில் ப்ளவர் மெட்ரிக் பள்ளியில் சேர்க்கை பெற்ற சுவேதன் என்ற மாணவரிடம், சீருடை, பாட புத்தகங்களுக்காக 11 ஆயிரத்து 977 ரூபாய் கட்டணமாக செலுத்தும்படி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட போது, எந்த கட்டணமும் இல்லாமல் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதன்படி வகுப்பில் சேர்த்த போதும், தனக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படவில்லை எனக் கூறி, மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், தனது மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி மாணவர் சார்பில் அவரது தந்தை மகாராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களின் கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல் கல்வி கற்கத் தேவையான பொருட்களுக்கான கட்டணத்தையும் மாநில அரசு ஏற்க வேண்டும் என கூறியுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

அதன்படி, இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவருக்கான சீருடை, பாட புத்தகங்களுக்கான கட்டணங்களை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை எனத் தெரிவித்த நீதிபதி, இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களுக்கான செலவுகளை அரசு, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இது சம்பந்தமாக, அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இரண்டு வாரங்களில் பிறப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, 25 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது.

மாநில அரசிடம்தான் அத்தொகையை கோர வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கும் வலியுறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மனுதாரர் மாணவருக்கு தேவையான சீருடை, பாட - புத்தகங்களை உடனடியாக வழங்க, தனியார் பள்ளிக்கு உத்தரவிட்ட நீதிபதி, அத்தொகையை அரசிடம் கேட்டுப் பெறவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com