சென்னை: சாதனை மாணவிக்காக திறக்கப்பட்ட கதவுகள் - ஆளுநர் மாளிகையில் அரங்கேறிய அதிசயம்!

தமிழ் வழியில் கல்வியில் பயின்று சாதனை படைத்துள்ளார். அவருக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் தவறே இல்லை என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஆளுநருடன் மாணவி ஷப்ரீன் இமானா குடும்பம்
ஆளுநருடன் மாணவி ஷப்ரீன் இமானா குடும்பம்

ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்களுக்காக மட்டுமே திறக்கப்படும் ராஜ்பவன் விருந்தினர் மாளிகை, தமிழக வரலாற்றில் முதல் முறையாக நேற்று ஒரு ஏழை மாணவி மற்றும் அவரின் குடும்பம் தங்குவதற்காக திறக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், மாநில அளவில் முதல் இடம் (600க்கு 600 மார்க்) பெற்ற திண்டுக்கல், அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நேற்று முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் மாணவி நந்தினி. உயர் கல்விச் செலவை அரசு ஏற்கும் என்று நந்தினியை உற்சாகப்படுத்தி முதல்வர் அனுப்பி வைத்தார்.

இதன் அடுத்த நிகழ்வாக பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டும் விதமாக அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தினார். ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த இந்த நிகழ்ச்சிக்காக தென்காசி மாவட்டம் கடையநல்லுாரில் இருந்து மாணவி ஷப்ரீன் இமானா பெற்றோருடன் நேற்று சென்னை வந்தார். அவர், ராஜ்பவனில் ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார்.

விதிமுறைப்படி இங்கே தனி நபர்கள் தங்குவதற்கு அனுமதியில்லை என்ற ராஜ்பவன் அதிகாரிகள், ஆளுநரின் கவனத்துக்கு இதை கொண்டு சென்றனர். அவர்களிடம், மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் ரேங்க் பெற்ற மாணவி, ஏழை கூலித் தொழிலாளியின் குடும்பத்தை சேர்ந்தவர், தமிழ் வழியில் கல்வியில் பயின்று சாதனை படைத்துள்ளார். அவருக்காக விதிமுறைகளை தளர்த்துவதில் தவறே இல்லை என்று ஆளுநர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மாணவி ஷப்ரீன் இமானா குறித்து கடையநல்லுார் ஹிதாயத்துல் இஸ்லாம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆமீன், நமது நிருபரிடம் கூறியதாவது: ”எங்களது தொடக்கப் பள்ளி 99 ஆண்டுகளை கடந்து 100 ஆண்டை நோக்கி பயணிக்கிறது. மாணவி ஷப்ரீன் இமானா, எங்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் டூ தேர்வில் 600க்கு 590 மார்க் பெற்றுள்ளார். தமிழ் வழியில் கல்வி பயின்று மாநில அளவில் முதலிடமும், ஒட்டு மொத்த அளவில் மாநிலத்தில் 3ம் இடமும் பெற்றுள்ளார். தென்காசி மாவட்டத்தில் தமிழ் வழியில் முதல் ரேங்க் பெற்றுள்ளதுடன், பர்ஸ்ட் குரூப்பில் பயின்று முதல் இடம் பெற்றவர் இவரே. இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா 100 மார்க், கணிதத்தில் 99, ஆங்கிலத்தில் 96, தமிழில் 95 மார்க் பெற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் இருந்து, நேற்று (9ம் தேதி) பிற்பகலில், கவர்னருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மாணவி ஷப்ரீன் இமானாவை பெற்றோருடன் சேர்ந்து சென்னைக்கு அனுப்பி வையுங்கள் என்று தகவல் வந்தது.

ஏழ்மையான குடும்பம். கூலித் தொழிலாளியான அவரை எப்படி உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைப்பது என்று நாங்கள் யோசிப்பதற்கு முன்பே, மாணவியின் போக்குவரத்து செலவை ராஜ்பவனே ஏற்றுக் கொள்ளும். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றனர். உடனே கார் பிடித்து மாலை 6 மணிக்கு அனுப்பி வைத்தோம். மாணவியின் தந்தை சிந்தாமதார் கூலித் தொழிலாளி. முதுகெலும்பு பிரச்னையால் வீட்டில் படுக்கையில் உள்ளார். எனவே மாணவியுடன் அவரது தாய் சிராஜினிகா, மாமா அகமது அப்சல் ஆகியோர் காரில் இன்று (10ம் தேதி) காலை 7 மணிக்கு ராஜ்பவன் வந்து சேர்ந்து விட்டதாகவும், அங்கேயே அவர்களுக்கு தங்கி, தயாராக ரூம் கொடுத்துள்ளதாக கூறினர், மிகப் பெருமையாக உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com