செந்தில் பாலாஜியை 8 நாள் விசாரிக்க அனுமதி - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

செந்தில் பாலாஜியை 8 நாள் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்க பிரிவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாகல் செய்த மனுவில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்கவும் அமலாக்கப் பிரிவு மற்றொரு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி அல்லி முன்பாக இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டன. அமலாக்கப் பிரிவு காவல் கோரும் மனுவின் விசாரணையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டபோது காவலில் செல்ல விருப்பமா? என கேட்டபோது விருப்பமில்லை என செந்தில் பாலாஜி பதிலளித்தார்.

புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்க பிரிவின் துணை இயக்குனர் கார்த்திக் தாசரி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் நடந்த வாதங்களின்போது வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அமலாக்க பிரிவு தரப்பில் வாதிடப்பட்டது.

செந்தில் பாலாஜி 19 மணி நேர விசாரணைக்கு பிறகே கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனால் அமலாக்க பிரிவு காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என்றும் வாதிடப்பட்டது.

மருத்துவ அறிக்கைகளை கருத்தில் கொண்டு இடக்கால ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது. மேலும், இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவு குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, தீர்ப்பிற்காக வழக்கை தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி அல்லி இன்று மாலை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 15 நாள் அமலாக்கப் பிரிவு காவல் கோரிய மனுவில் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இன்று முதல் 23 ஆம் தேதி மாலை 3 மணி வரை காவலில் வைத்து விசாரித்துவிட்டு அன்றைய தினம் மீண்டும் காணொலி மூலம் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனையிலேயே விசாரிக்க வேண்டும் என்றும், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படும் சிகிச்சையை தொடர்ந்து காவேரி மருத்துவமனையே வழங்கலாம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

அமலாக்க பிரிவு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, உத்தரவை கேட்ட செந்தில் பாலாஜி தனது உடல்நிலை சரியில்லை என்றும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் நீதிமன்ற காவலில் அனுப்பக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தார்.

பின்னர் அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிட வேண்டாம் என்றும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதை கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் அனுமதித்ததையும் நீதிபதி கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கும் என்றும் அச்சம் தெரிவித்தனர்.

ஆனால் நீதிபதி அதற்காகத்தான் மருத்துவமனையில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து இருப்பதாகவும், உத்தரவுகளை முழுமையாக படித்துவிட்டு உரிய நிவாரணத்தை தேடும்படியும் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை விசாரணையில் அசௌகரியம் ஏதும் ஏற்பட்டால் செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com