சென்னையில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்ன அவலம் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு ( நீட் தேர்வு) நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ், பி.டி. எஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஹோமியோபதி ஆகியவைக்கு அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு நீட் தேர்வு நாடு முழுவதும் 490 நகரங்களில் 300-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 200 தேர்வு மையங்களில் 95 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர்.
சென்னையில் 28 தேர்வு மையங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவிகள் கடும் சோதனைக்குப் பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளியில் உள்ள மையத்தில் நீட் தேர்வு வந்த மாணவியின் உள்ளாடையைக் கழற்ற சொன்ன அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு எழுத மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சோதனை செய்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவியின் உள்ளாடையில் கொக்கி இருந்த காரணத்தால் அதை கழட்ட வலியுறுத்தியுள்ளார்.
மாணவி எவ்வளவோ எடுத்துக்கூறியும், தேர்வு கண்காணிப்பாளர் விடாப்பிடியாக உள்ளாடையை கழட்ட சொன்னதாக கூறப்படுகிறது. கடும் மன உளைச்சலுக்குப் பின்னர் மாணவி அழுதுக்கொண்டே தனது உள்ளாடையைக் கழற்றிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்வு எழுதி முடித்த பின்னர் மாணவி தேர்வு மைய வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுததாகக் கூறப்படுகிறது. பின்னர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிந்து அவர்கள் வந்து அழைத்துச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு கேரளாவில் இதேபோன்று ஒரு சம்பவம் நிகழ்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது தமிழகத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் எழுப்பி உள்ளது.