சென்னையில் கல்லூரி மாணவர் பேருந்தில் ஏற முயன்ற போது கீழே விழுந்து இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சூர்யா(19). இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கோயம்பேட்டில் இருந்து சென்ற அரசு பேருந்தில் தடம் எண் 48-ல் ஏற முயன்றார்.
பேருந்து கோயம்பேடு 100 அடி சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அதே பேருந்தின் பின் சக்கரம் அவரது இடுப்பு பகுதியில் ஏறி இறங்கியது. இதில், அவர் பலத்த காயமடைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் காயம் அடைந்த சூர்யாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சூர்யா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்திற்கு காரணமான பஸ் டிரைவர் வெங்கடேசன்(57), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.