சென்னையில் மது அருந்தும்போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை தரமணி அடுத்துள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஞானவேல். கூலி வேலை பார்த்து வருகிறார். இவர், தரமணியில் உள்ள ரயில்வே பாலத்திற்குக் கீழே அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, கல்குட்டை பகுதியைச் சேர்ந்த இருவரும், பெருங்குடியைச் சேர்ந்த 3 பேரும் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். திடீரென, இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தடுக்கச் சென்ற ஞானவேலை, பெருங்குடியைச் சேர்ந்த கோபி, மாசிலாமணி, கோடீஸ்வரன் ஆகிய 3 பேரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த ஞானவேலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஞானவேல் கொலையில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
- சுரேகா எழில்