கூடுவாஞ்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனை தாண்ட நினைத்து 20 அடி மழைநீர் கால்வாயில் விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,கூடுவாஞ்சேரி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள கால்வாயில் விழுந்த தனியார் நிறுவன ஊழியரை பல மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் செர்வின் ரோஸ் (24). இவர் கூடுவாஞ்சேரியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில்,நேற்று இரவு பணி முடிந்து அறைக்கு திரும்பிய செர்வின் ரோஸ் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்டர் மீடியன் என நினைத்து சிமெண்ட் தடுப்பு மீது ஏறி குதித்துள்ளார். ஆனால் 20அடி ஆழம் உள்ள மழைநீர் கால்வாய் என்பதால் உள்ளே விழுந்து செர்வினின் கால் முறிவு ஏற்பட்டது.
தொடர்ந்து,மேலே ஏற முடியாமல் உள்ளே சிக்கி கொண்ட செர்வின் கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால் யாரும் வராததால் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்டர் மீடியன் என நினைத்து கால்வாயில் குதித்த நபரால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.