செங்கல்பட்டில் மது வாங்கித் தரச் சொல்லி தொந்தரவு செய்த நண்பனை கட்டையால் அடித்துக் கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (36). கொத்தனாராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான வினோத் குமார் அடிக்கடி யாரிடமாவது மது கேட்டுத்தொந்தரவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இராட்டிணங்கிணறு மதுபானக்கடை அருகே வினோத் குமார் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35), தங்கராஜ் (37), ஷான் (40) மற்றும் திருமணியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (48) ஆகியோரிடம் மது வாங்கித் தருமாறு கூறி தொல்லை செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் அருகில் இருந்த கட்டையை எடுத்து வினோத்குமாரின் தலையில் அடித்துள்ளனர். அதில் வினோத் குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நால்வரும் வினோத்மாரை தூக்கிச் சென்று மதுபோதையில் கீழே விழுந்து கடந்ததாகக் கூறி அவரது வீட்டில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை 11 மணி வரை எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த அவரது மனைவி வினோத்குமாரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வினோத்குமாருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நண்பர்கள் கட்டையால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு நகரப் போலீசார் வினோத்குமாரின் நண்பர்கள் நான்கு பேரையும் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
மது வாங்கித்தரக்கூறி தொந்தரவு செய்த நபரை நண்பர்களே அடித்துக்கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.