செங்கல்பட்டு: ’வண்டில ப்ரேக் பிடிக்கல’ வழக்கு தொடுத்த பெண் - நுகர்வோர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு என்ன?

இருசக்கர வாகனம் வாங்கி 3 மாதமே ஆன நிலையில் பிரேக் டிஸ்க் பழுதாகி உள்ளது.
செங்கல்பட்டு: ’வண்டில ப்ரேக் பிடிக்கல’ வழக்கு தொடுத்த பெண் - நுகர்வோர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு என்ன?

புதியதாக வாங்கிய இரு சக்கர வாகனத்தில் அடிக்கடி பிரேக் டிஸ்க் பழுதானதால் நுகர்வோர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். அவருக்கு இழப்பீடாக பெரும் தொகையை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடுத்த படப்பை பகுதியைச் சேர்ந்தவர் அனிதா மேரி. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் உள்ள எஸ்விசி மோட்டார்ஸ் எனும் வாகன விற்பனை கடையில் TVS APACHE எனும் புதிய பைக்கை சுமார் 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இருசக்கர வாகனம் வாங்கி 3 மாதமே ஆன நிலையில் பிரேக் டிஸ்க் பழுதாகி உள்ளது. இது குறித்து வாகனம் வாங்கிய இடத்தில் புகார் அளித்துள்ளார். அதற்கு வாகன விற்பனையாளர் டிவிஎஸ் சர்வீஸ் சென்டரில் வாகனத்தை பழுது பார்க்குமாறு கூறியுள்ளார்.

இதனால் அனிதா மேரி டிவிஎஸ் சர்வீஸ் சென்டருக்கு சென்று பிரேக் டிஸ்க்கை மாற்றி உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து 3-முறைக்கும் மேல் பிரேக் டிஸ்க் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா மேரி செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் காசி பாண்டியன் மற்றும் உறுப்பினர் ஜவகர் ஆகியோர் பாதிக்கப்பட்ட அனிதா மேரிக்கு வாகனத்தை விற்பனை செய்த எஸ்விசி மோட்டார்ஸ், டிவிஎஸ் சர்வீஸ் சென்டர், வாகன உற்பத்தி தொழிற்சாலை ஆகிய மூவரும் சேர்ந்து வாகனத்தின் முழு தொகையான ₹80,000 ரூபாயை வழங்க வேண்டும். மேலும் நுகர்வோருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ₹1,00,000 ரூபாயும், வழக்கு செலவிற்காக 15,000 ரூபாயும் இழப்பீட்டு தொகையாக வழங்குமாறு உத்தரவிட்டனர். மொத்தம் 1,95,000 ரூபாயை எஸ்விசி மோட்டார்ஸ், டிவிஎஸ் சர்வீஸ் சென்டர், வாகன உற்பத்தி தொழிற்சாலை ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்ந்து அனிதாவிற்கு வழங்க உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com