கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைச்சரை முற்றுகையிட்டு சரமாரி புகார் அளித்ததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலு 4 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருபவர்களை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். இதனைத்தொடர்ந்து, அமைச்சர் வெளியே வந்த பொழுது, கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிவரும், சங்கர் என்பவரின் உறவினர்கள் சிலர் அமைச்சரை முற்றுகையிட்டு கேள்வி கணைகளால் துளைத்து எடுத்தனர்.
இருளர்கள் என்றால் இளிட்சவாயா எனக் கேட்ட அவர்கள், ஏழைக்கு முறையாக சிகிச்சை பெறுவதில்லை என குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
தொடர்ந்து முறையாக சிகிச்சை அளிக்காமல் பதிலும் சொல்லாமல் மருத்துவர்கள் அலைகழித்து வருவதாகவும், எங்களிடம் அவர் உடலைக்கொடுத்து அனுப்பி விடுங்கள் என கடுமையான வார்த்தைகளால் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து எடுத்து கூறினார். இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.