செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கருக்கந்தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவர் விற்ற மதுபான பாட்டிலை வாங்கி குடித்த சித்தாமூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பேருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி (34), அவரது மனைவி அஞ்சலை (22), அஞ்சலையின் தாய் வசந்தா (40), பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெண்ணியப்பன் (65), அவரது மனைவி சந்திரா (55) ஆகியோர் விஷ சாராயத்தை குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதில் சின்னத்தம்பி, வசந்தா, வெண்ணியப்பன், சந்திரா ஆகியோர் தங்கள் வீடுகளிலேயே இறந்துள்ளனர். அஞ்சலை செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மதுபானத்தை விற்ற அமாவாசை என்பரும் உடல்நலம் சரியாக இருந்த போதிலும் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மூன்று காவலர்களை பணியிடை நீக்கம் செய்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவிட்டிருந்தார். இவர்கள் மெத்தனால் கலக்கப்பட்டிருந்த விஷசாராயத்தை குடித்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அமாவாசையிடம் மது வாங்கி அருந்திய புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செம்பு (60), ராஜி (32), பெருங்கரணையை சேர்ந்த மாரியப்பன் (65) மற்றும் சங்கர் (38) ஆகிய 4-பேர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் நான்கு பேரும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே மது விற்பனை செய்த அமாவாசை மற்றும் சித்தாமூரை சேர்ந்த அஞ்சலை சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கள்ளசாராயம் விற்கப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இதே போன்று விழுப்புரம் மாவட்டத்திலும் விஷசாராயம் அருந்தியதால் 6 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவங்களில் தொடர்புடையவர்களை போலீசார் தேடிவரும் நிலையில், தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் தீவிர மதுவிலக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக வேறு குற்றவாளிகள் தொடர்பில் உள்ளனரா? இந்த இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.