செங்கல்பட்டு: நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதியுற்றனர்.
செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் புறவழிச்சாலையில் வளைவில் திரும்புவதற்காக வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது எம்சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி, முன்னாள் சென்ற வேன் மீது மோதியது. இதில் வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற அரசு பேருந்து மற்றும் கார் மீது மோதியது.
இதில் வேனில் பெரம்பலூரில் இருந்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்ற நோயாளி உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி சென்று விட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.