டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக விறபனையாளர்கள் வசூலிப்பது தொடர்பாக ஆங்காங்கே தகராறுகள் நடந்து வருகிற போதிலும் தகுந்தவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் அரங்கேறி இருக்கிறது ஒரு சம்பவம். டாஸ்மாக் கடையில் மது பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கிய விற்பனையாளரை அடித்து உதைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பிண்ணபூண்டி கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை யில் நேற்று பாதூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ், கண்ணன் ஆகிய இருவரும் பீர் பாட்டில் ஒன்று பிராந்தி பாட்டில் ஒன்று என மொத்தம் இரண்டு பாட்டிகள் வாங்கியுள்ளனர். விற்பனையாளர் சரவணன் மற்றும் தாமரைக்கண்ணன் ஆகியோர் மது பாட்டிலுக்கு கூடுதலாக 20 ரூபாய் பெற்றுள்ளனர். இதற்கு காமராஜன், கண்ணன் ஆகிய இருவரும் விற்பனையாளரிடம் ''ஏன் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் வீதம் கூடுதலாக இரண்டு பாட்டிலுக்கு 20 ரூபாய் பணம் எடுத்துள்ளீர்கள்'' என கேட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் காமராஜர், கண்ணன் ஆகிய இருவரும் கடைக்கு உள்ளே சென்று விற்பனையாளரைத் தாக்கியுள்ளனர். கடைக்கு வெளியே வந்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. உடனடியாக அச்சரப்பாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தகராறு ஈடுபட்டிருந்த கண்ணன் மற்றும் காமராஜை விசாரணைக்காக அச்சரப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கடை மேலாளர் முருகன், தகராறில் ஈடுபட்ட காமராஜ், கண்ணன் ஆகியோர் மீது புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து அச்சரப்பாக்கம் போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.