செங்கல்பட்டு அருகே இருங்குன்றம் பள்ளி பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகன் மோகன்ராம் (19). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மோகன்ராமுக்கு பிறந்தநாளை முன்னிட்டு தனது கல்லூரி நண்பர்களுடன் செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பள்ளி பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாகக் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மோகன்ராம் நீருக்குள் மூழ்கி உள்ளார். தொடர்ந்து சக நண்பர்கள் அவரை நீருக்குள் தேடி கண்டுபிடித்துக் கரைக்கு இழுத்து வந்தனர்.
இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108- ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மோகன் ராமை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் வந்த செங்கல்பட்டுத் தாலுக்கா போலீசார் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.