திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவரிடம் 58 பவுன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை அதிகாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
வேலூர் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகதேவி. இவர் டி.ஐ.ஜி.முத்துசாமி-யிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், 'எனக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறேன். எனக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 22021-ம் ஆண்டு சென்னை ஆலந்தூரை சேர்ந்த புவனேஷ்வர் என்பவர் சமூக வலைதளத்தில் அறிமுகமானார்.
அவர் என்னிடம் நட்பாக பழகி காதலிப்பதாக சொன்னார். நானும் அவரை முழுதாக நம்பினேன். இதைத்தொடர்ந்து, பல்வேறு அவசர தேவைகளுக்காக என்னிடம் ரொக்கமாக சிறுக-சிறுக ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வாங்கினார்.
மேலும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி 58 பவுன் தங்க நகைகளையும் வாங்கிச் சென்றார். ஆனால், இதுவரை பணத்தையோ, நகைகளையோ திருப்பித்தரவில்லை.
கேட்டால் இதோ, அதோ என்று ஏமாற்றி வருகிறார். திருமணமும் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை. இது குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை' என தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவிட்டார். மேலும், 'பெண்கள் ஆன்லைனில் நட்பு பாராட்டி இதுபோல் ஏமாறக்கூடாது.
குறிப்பாக, திருமணமான கணவனை பிரிந்து வாழும் பெண்களை குறிவைத்து மோசடி செய்யும் இளைஞர்களிடம் பெண்கள்தான் உஷாராக இருக்க வேண்டும். அப்படி எதுவும் பிரச்சினை என்றால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க தயங்கக்கூடாது' என்றார்.
- அன்பு வேலாயுதம்