பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிப்பதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் செல்போன், கேமரா உள்ளிட்டவைகள் மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காக மலைக்கோவிலுக்கு சென்றிருந்தபோது ஊழியர் ஒருவர் அவரது மகளை தொட்டு தள்ளினார் என கூறி ஆடியோவை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில், அவர் கருவறையை படம் பிடிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதனால் செல்போனை எடுக்கக்கூடாது என கூறினோம் என்றும் அதற்கு உண்டான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு விளக்கம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் மலைக்கோவிலுக்கு செல்போனை கொண்டு செல்லக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதி கேசவலு அமர்வில் கோவிலுக்குள் செல்போன் போன்ற கருவிகளை எடுத்துச்செல்ல நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், அதை ஏன் அமல்படுத்தக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கருவறைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்ததற்காக கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், திருப்பதி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாததை போல தமிழகத்தில் ஏன் அமல்படுத்தக்கூடாது என கேள்வி எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து பதிலளித்த அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடுத்து 24 மணி நேரம் கண்காணிக்கும் வழிகளை நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.
தற்போதைக்கு இதை தடுக்க வேண்டும் செல்போன் கொண்டு வருபவர்களை மலையில் இருந்து இறக்கி விடுங்கள் என தெரிவித்த நீதிபதிகள், பழனி கோவில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கட்டமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவும் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து பழனி கோவிலில் மலைக்கோவிலுக்கு செல்லும்முன் மலை அடிவாரம், படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையத்திலும், ரோப் கார் நிலையங்களிலும் செல்போன், கேமராக்களை ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்று சென்று விட்டு மீண்டும் செல்போனை பெற்று செல்வதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.