சிபிஎஸ்இ அங்கீகாரம்: மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி- சாட்டையை சுழற்றுமா பள்ளி கல்வித்துறை?

சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதாக பொய்யாக விளம்பரப்படுத்தி ஒன்றரை ஆண்டாக அங்கீகாரம் பெறவில்லை. தங்களை ஏமாற்றி விட்டதாக பெற்றோர்கள் புகார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்
பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்

தஞ்சாவூர், மாதாக்கோட்டை சாலையில், கமலா சுப்பிரமணியம் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 2022-2023 கல்வியாண்டில் 11ம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ பாட பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி 18 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், இந்த கல்வியாண்டில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்கள் தயாரான நிலையில், சிபிஎஸ்இ அங்கீகாரம் பள்ளிக்கு இல்லை என்பது பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது.

இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் சென்று கேட்ட போது, கடந்த ஆண்டு முதல் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற முயற்சி செய்து வருகிறோம். இதுவரை கிடைக்கவில்லை, இன்னும் ஓரிரு வாரங்களில் அங்கீகாரம் கிடைத்துவிடும் என கூறியுள்ளனர். மேலும் அவ்வாறு கிடைக்கவில்லை என்றாலும் கூட 18 மாணவர்களையும் மற்றொரு தனியார் பள்ளியில் தனியாக வைத்து வகுப்புகளை நடத்தி தேர்வு எழுத வைக்கிறோம் என கூறியுள்ளனர்.

பெற்றோர்கள் பேட்டி
பெற்றோர்கள் பேட்டி

இதனால் ஆத்திரமடைந்தை பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டாக எங்களின் பிள்ளைகளின் கல்வி வீணாகிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர். அங்கீகாரம் இல்லாமலே 11ம் வகுப்பு நடத்தி பொய்யான தேர்வுகளையும் நடத்தி தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கிவிட்டனர் என‌ ஆதங்கம் தெரிவிக்கின்றனர். தற்போது 12ம் வகுப்பு பாடங்களையும் பள்ளி நிர்வாகம் வேறு பள்ளியில் வைத்து நடத்துவது போல் ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், எங்களின் பிள்ளைகளின் படிப்பு ஒன்றரை ஆண்டு வீணாகிவிட்டது. சிபிஎஸ்இ என பள்ளி முகப்பில் எழுதி இருந்ததை தற்போது பெயிண்ட் வைத்து அளித்து விட்டனர். இதனால் இந்த ஆண்டு தங்கள் பிள்ளைகள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவார்களா என்ற அச்சத்திலும், மன அழுத்தத்திலும் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கட்டணத்தையும் வாங்கி கொண்டு எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் விளையாடிய பள்ளி நிர்வாகம் மீது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் ஆட்சியரிடம் மனுவும் கொடுத்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com