‘காவிரி நீரை திறந்து விட வேண்டும்’- தமிழக எல்லையில் விவசாயிகள் முற்றுகை

காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு எட்டுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்
விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

காவிரி நீரை திறந்துவிடக்கோரியும், கழிவு நீரை நிறுத்தக்கோரியும் தமிழ்நாடு- கர்நாடகா எல்லையில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் காவிரி பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடாமல், பங்கிட்டு வழங்காமல் தொடர்ந்து அடாவடி போக்கை கையாண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் இருக்கும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பல்வேறு கட்சிகளும் நமக்கான உரிமைக் குரல் கொடுக்காமல் நீரை பெறுவதற்கான போராட்டத்தை முன்னெடுக்காமல் அவரவர்களுக்குள் இருக்கும் கவுரவ பிரச்சினையில் விவசாயிகளை பலிகடாவாக சிக்கவைத்து வருகின்றனர்.

இந்த பிரச்சினையில் கர்நாடகாவில் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டத்தை நடத்தி வருவது மட்டுமல்ல தமிழகத்திற்கு உரிமையாக வழங்க வேண்டிய உரிமை நீரை வழங்காமல், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப்பதற்கான அத்துணை வேலையையும் செய்கின்றனர்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள காவிரி விவசாய நிலங்கள் சுமார் 5 லட்சத்திற்கு மேல் பாதித்து அழியும் சூழ்நிலையிலும் கருணையின்றி தொடர்ந்து கர்நாடகா அரசு தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

அது மட்டும் இன்றி தென்பென்னையாற்றில் கழிவு நீரை , இரசாயன நீரை திறந்து விட்டுஅங்கிருக்கும் பகுதிகளை பாழடையச் செய்து மண்வளத்தை அழிக்கும் மோசடி திட்டத்தை கர்நாடக அரசு முன்னெடுத்து வருகிறது.

இதனைக் கண்டித்து தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான கிருஷ்ணகிரி, ஓசூர் அடுத்த ஜூ ஜூ வாடி சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இன்று நடைபெற்றது.

இன்றைய போராட்டத்தில் தமிழக காவல்துறை ஜு.ஜூ.வாடி சுங்க சாவடியை முற்றுகையிட அனுமதிக்காமல் 3 கிமீ தொலைவிலே நம்மை தடுத்து நிறுத்தி நடவடிக்கை அராஜக போக்கை நிகழ்த்தியுள்ளனர். நமது உரிமையுடைய காவிரி ஆற்றின் நீரைப் பெறுவதற்கு கூட போராட அனுமதி இல்லாத சூழ்நிலையில் தான் தமிழக விவசாயிகள் நிலைமை உள்ளது.

இதனை தொடர்ந்து சாலையில் அமர்ந்து நமது கண்டனத்தை பதிவு செய்தும், உடனடியாக உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்றும் , தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றி வரும் இரசாயன கழிவு நீரை தடுத்து நிறுத்தவும் கோரி கண்டன முழக்கங்கள் பதிவு செய்யப்பட்டது.

தமிழக அரசு தங்களுக்குள் அரசியல் ரீதியாக இருக்கும் கருத்து முரண்களை புறந்தள்ளிவிட்டு உடனடியாக காவிரி நதி நீர் பிரசினையில் டெல்டா விவசாய பயிர்களை காப்பாற்ற அவசர கால நடவடிக்கை எடுத்தும், அனைத்து கட்சி, அனைத்து இயங்களை அழைத்தும் கண்டனத்தை பதிவு செய்து ஒருமித்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு எட்டுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இன்றைய முற்றுகை போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, மாநில தலைவர் இரா. சண்முகசுந்தரம், இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டர் உள்ளிட்ட நிர்வாகிகள், சங்கத்தின் உறுப்பினர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-பொய்கை கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com