போதை, விபத்து, காரை எரிக்க முயற்சி-பிடிபட்ட வாலிபர்கள்

போதையில் போலீசாரிடம் சிக்கிய வாலிபர்கள் தங்கள் காரை எரிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கார்
பறிமுதல் செய்யப்பட்ட கார்

புதுக்கோட்டையில் இருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று இரவு 2 வாலிபர்கள் ஒரு காரில் சென்று கொண்டு இருந்தனர். திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே அந்த கார் வந்தபோது, நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பு கட்டையில் மோதியது. இதைக்கண்ட போக்குவரத்து போலீசார் காரில் வந்த வாலிபர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும், காரில் டீசல் இல்லாமல் நின்றுவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, மதுபோதையில் இருந்ததற்காக போலீசார் வழக்குப்பதிந்தனர். உடனே 2 வாலிபர்களில் ஒருவர் பாட்டிலை எடுத்து சென்று அருகே இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் வாங்கி கொண்டு வந்தார். இதையடுத்து அவர்கள் திடீரென கார் மீது டீசலை ஊற்றி எரிக்க முயன்றனர். உடனே அந்த வாலிபர்களை போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீஸ்காரரையும் தாக்க முயன்றனர்.

இதைக்கண்ட பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கி கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து காரை கிரேன் மூலம் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

மேலும் அவர்கள் மதுபோதையில் இருந்ததால் அவர்களிடம் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை எழுதி வாங்கிக்கொண்டு, அவர்களை போலீஸ்நிலையம் வரக்கூறிவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று இரவு அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

- ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com