நெல்லை மாவட்டம் நாங்குநேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாதிய வன்மத்தை தூண்டும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரில் நான்கு மாணவர்கள் கைதாகியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
நாங்குநேரி சங்கரரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர் சாமுவேலிடம் பேசினோம். அவர் கூறுகையில், "இந்த அரசுப் பள்ளியில் 1200 மாணவ மாணவியர் படித்தார்கள். நாங்குநேரி, மறுகால்குறிச்சி, மஞ்சன்குளம், பெரும்பத்து உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மாணவ மாணவியருக்கு இந்தப் பள்ளி தான் வரப்பிரசாதம்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மறுகால்குறிச்சியை சேர்ந்த மாணவர்கள் ஒரு பெண் ஆசிரியரை கன்னத்தில் அறைந்தார்கள். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சாதிய மோதலினால் பெரும்பாலான மாணவர்கள் வள்ளியூர் பள்ளிக்கு செல்வதால் தற்போது இந்தப் பள்ளியில் வெறும் 350 மாணவ மாணவியரே படிக்கிறார்கள்.
நேற்று பள்ளி வகுப்பறை சுவரில் சில மாணவர்கள் சாக்பீசால் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார்கள், என்ன ஏது என்று பார்க்கும் பொது, சாதி ரீதியாக வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது, அதிலும் மிகவும் மோசமாக எழுதியிருந்தனர். உடனடியாய் போலீசில் புகார் செய்தோம்" என்றார்.
இதனைத் தொடர்ந்து ஸ்பாட்டுக்கு வந்த டி.எஸ்.பி ராஜீ அந்த சாதிய வன்ம வாசகங்களை அழிக்க உத்தரவிட்டார். இதை யார் எழுதியது என்று விசாரிக்கும் போது மறுகால்குறிச்சியைச் சேர்ந்த மாணவர்கள் அதிலும் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் என்பது தெரிய வந்தது. உடனடியாக நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்ப்ட்டார்கள்.