கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டி மனு தாக்கல்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ள பெயர்களில் சாதி பெயரை நீக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கல்வி நிலையங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கல்வியே சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல பள்ளி, கல்லூரி உள்ளிட்ட நிலையங்களின் பெயர்களுடன் சாதிப் பெயரை சூட்டியுள்ளது, பாகுபாட்டைக்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கல்வித்துறையில் சாதி புற்றுநோயாக பரவுவதாகவும், சாதி அடிப்படையிலான பெயர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் புகழ்பெற்ற தலைவர்கள் எவரும் சாதி அடிப்படையிலான பள்ளிகளை உருவாக்க வழிகாட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை கண்காணிப்பது மற்றும் பள்ளிகளுக்கு பெயர் சூட்டுவது தொடர்பான பிரச்னையை கவனிக்கும் பொறுப்பு மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமை எனவும், சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவன், அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிகளில் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை கற்பிக்காமல் சாதியை கற்பிக்க கூடாது. தமிழகத்தில் பள்ளி பெயரில் உள்ள சாதியை ஒழிக்க மத்திய, மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் கோரிக்கை மனு அனுப்பியதாகவும், ஆகஸ்ட் 13ம் தேதியுன் மனு அளித்ததாகவும், ஆனால் எந்த மனுவிற்கும் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

எனவே, தனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ள பெயர்களில் சாதி பெயரை நீக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com