மயிலாடுதுறை அருகே புதுமனை புகுவிழாவிற்கு சீர்வரிசை எடுத்துசென்ற பெண்கள் கூட்டத்திற்குள் கார் வேகமாக மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.5 பேர் படுகாயம் அடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கானோடை மெயின்ரோடு பகுதியைச்சேர்ந்தவர் துரைராஜ். இவர் அந்த பகுதியில் புது வீடு ஒன்று கட்டியுள்ளார்.நேற்று காலை புதுமனை புகுவிழா நடத்த அழைப்பிதழ் கொடுத்து உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அதிகாலையிலேயே வந்துள்ளனர்.
இதனை முன்னிட்டு, நேற்று அதிகாலை வீட்டின் அருகே உள்ள பிள்ளையார் கோவிலிலிருந்து உறவினர் வீட்டு பெண்கள் சீர்வரிசை தட்டுகளை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்து வந்துள்ளனர்.அப்போது அந்த வழியாக காரைக்கால் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று திடீரென சீர்வரிசை எடுத்துச்சென்ற பெண்கள் கூட்டத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதனையடுத்து காரை நிறுத்தி என்ன ஏது என்று கூட பார்க்காமல் டிரைவர் காருடன் வேகமாக தப்பிச்சென்றுள்ளார்.
இந்த விபத்தால் பெண்கள் பலர் காயமடைந்த அலறியபடி ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளனர். இதில் துரைராஜின் உறவினர் வீட்டு பெண்களான சீர்காழி அருகே உள்ள எருக்கூர் ஜெயா, திருவாரூர் மாவட்டம் வலங்கைமானைச் சேர்ந்த அபிநயா, நாகையைச்சேர்ந்த சித்ரா, சிங்கானோடை சண்முகப்பிரியா, எடுத்துக்கட்டிச்சாத்தனூர் அபிராமசுந்தரம், திருக்கடையூர் தனலட்சுமி என பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த பயங்கர சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தைச் சேர்ந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதில், எருக்கூர் ஜெயா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துள்ளார். மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிவரும் அபிராமசுந்தரம், சித்ரா, தனலட்சுமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மற்றும் நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இரு பெண்கள் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பொறையார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அவரிடம் பேசினோம். “அதிகாலை வேளை என்பதால் கார் டிரைவர் தூங்கியிருக்கலாம். விபத்தை நிகழ்த்திவிட்டு தப்பி ஓடிய காரை சிசிடிவி பதிவுகள் மூலம் தேடி வருகிறோம். விரைவில் அந்த டிரைவரை கண்டுபிடித்து கைது செய்துவிடுவோம்.” என்றார்.
புதுமனை புகுவிழாவினை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய நேரத்தில் நிகழ்ந்த இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியைச்சேர்ந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-ஆர்.விவேக் ஆனந்தன்