டாஸ்மாக் பார்களை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்

ஆறு மாதங்களில் டாஸ்மாக் பார்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பித்த உத்தரவு ரத்து
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் ஆறு மாதங்களில் டாஸ்மாக் பார்களை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

டாஸ்மாக் மதுபான கடை அருகில் திண்பன்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2021ம் ஆண்டும், 2022ம் ஆண்டும் அறிவிப்பாணைகள் வெளியிட்டது.

இந்த டெண்டர் அறிவிப்புகளில், நில உரிமையாளர்களின் ஆட்சேபமில்லா சான்று வற்புறுத்தப்படவில்லை எனக்கூறி பார் உரிமம் பெற்றவர்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

2021ம் ஆண்டு டெண்டர் அறிவிப்பை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களை ஆறு மாதங்களில் மூட வேண்டும் என 2022 ஜனவரி 31ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அதேசமயம், 2022ம் ஆண்டு டெண்டரை எதிர்த்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், டெண்டரை ரத்து செய்ததுடன், புதிய டெண்டர் அறிவிப்பாணையை வெளியிடும் போது, நில உரிமையாளரிடம் ஆட்சேபமில்லா சான்று பெற வேண்டும் என கடந்த 2022 செப்டம்பர் 30ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இரு உத்தரவுகளை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் அனைவரும் நில உரிமையாளர்களிடம் ஆட்சேபமில்லா சான்று பெற்று சமர்ப்பிப்பது சாத்தியமற்றது எனவும், அதை ஏற்றுக் கொண்டால் தற்போது உரிமம் பெற்றவர்கள் மட்டுமே டெண்டர் கோரி விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறி, டெண்டரை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

மேலும், டெண்டர் காலம் முடிவடையும் நிலையில் உள்ளதால் புதிய டெண்டர் கோர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. அதேசமயம், ஆறு மாதங்களில் டாஸ்மாக் பார்களை மூட நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

2022ம் ஆண்டு டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், புதிதாக டெண்டர் கோர டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com