வேலூரில் மதுபோதையில் விக்னேஷ் என்ற தொழில் அதிபர் மூச்சுத் திணறி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் வேலூரில் லாட்ஜ் ஒன்றை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம், சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் லாட்ஜில் உள்ள இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் அவரது அறைக் கதவு திறக்காததால் ஊழியர் ஒருவர் போய் கதவைத் திறந்திருக்கிறார்.
அப்பொழுது, அறையில் ஒரே புகை மூட்டமாக இருந்தது. உடனடியாக விக்னேஷை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரிடம் விசாரித்தபோது, 'விக்னேஷ் மது குடித்து விட்டு அப்படியே சிகரெட் பற்ற வைத்து, பிடித்துக் கொண்டே தூங்கியுள்ளார்.
கையில் இருந்த சிகரெட் துண்டை அணைக்காமல் அப்படியே போட்டுவிட அது அருகில் சுற்றி வைக்கப்பட்டிருந்த மெத்தையில் விழுந்து கொஞ்சம், கொஞ்சமாக அதிலிருக்கும் பஞ்சு புகை அறை முழுக்க நிரம்பி விக்னேஷுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது.
மது போதையில் அவருக்கு சுய நினைவில்லாமல் அப்படியே இறந்து போயிருக்கிறார். அவரது உடல் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரம் தெரியவரும்' என்றனர்.
- அன்புவேலாயுதம்