திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது பஸ் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

விபத்தில் சீதாராமன் (20), நாராயணன் (45) ஆகிய இருவரின் உடலும் நசுங்கியதால் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது பஸ் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

திருத்தணி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அன்டபட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் பலர் குழுவாக இணைந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்று வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 37 பேர் குழுவாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை தொடங்கி நடை பயணம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு 11மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக குழுவாக சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பேருந்து அதிவேகமாக பின்னால் வந்து மோதியது. இந்த விபத்தில் சீதாராமன் (20), நாராயணன் (45) ஆகிய இருவரின் உடலும் நசுங்கியதால் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் முகேஷ் கண்ணன், வடிவேல் அழகன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரண்டு கிலோமீட்டர்க்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்நிலையில் போக்குவரத்து போலீசார் நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com