நெல்லையில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையில் தினசரி உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பல்நோக்கு மருத்துவமனையில், பலதரப்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இங்கு தினம்தோறும் அகற்றப்படும் மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பல்நோக்கு மருத்துவமனையின் வளாகத்திற்கு பின்புறம் எரிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அதன்படி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிறுவனம் மருத்துவக் கழிவுகளை கிலோ 52 ரூபாய் வீதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள தனியார் கிடங்கில் வைத்து எரித்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், தற்போது அந்த விதி மீறப்பட்டு அரசு பல்நோக்கு மருத்துவமனை அருகில் எரிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து திருநெல்வேலி பகுதியில் மருத்துவக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதும், பொது இடத்தில் வைத்து எரிக்கப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் சம்பவமாக உள்ளது.