சேத்தியாத்தோப்பு அருகே மின்கம்பிகள் உரசாமல் இருக்க கம்பியில் செங்கல் கட்டித்தொங்கவிடப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் சுடுகாடு அருகில் வயல்களில் உயரழுத்த மின்கம்பி மற்றும் குறைந்தழுத்த மின்கம்பிகள் செல்கின்றது.
இந்நிலையில் உயரழுத்த மின்கம்பி செல்லும் வழியில் அதன் கீழாகச் செல்லும் தாழ்வழுத்த மின் கம்பியானது ஒன்றையொன்று உரசிடும் விதத்தில் செல்கிறது. இந்த இரண்டு மின் கம்பிகளும் ஒன்றை ஒன்று உரசி கொண்டால் மிகப்பெரிய விபத்து மற்றும் மின் கம்பிகள் அறுந்து வயலில் விழுந்துவிடும் அபாய நிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், விவசாயிகள் இந்த மின்கம்பிகளை மாற்றி புதிய மின் கம்பிகளைச் சரியான உயரத்தில் அமைக்கக் கோரிக்கை வைத்தனர்.ஆனால் மின்வாரியத்துறை அதிகாரிகளோ அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
புது விதமான முயற்சியாக மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பிகள் ஒன்றை ஒன்று உரசாமல் இருக்கச் செங்கல்லை கட்டி தொங்க விட்டனர். மின்கம்பியின் மேல் செங்கல் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதால் மின் கம்பி அறுந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
செங்கல் கட்டி தொங்கவிடப்பட்ட மின்கம்பிகள் பழைய கம்பிகளாக இருந்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் வயலில் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
இது சம்பந்தமாக சேத்தியாத்தோப்பு மின்சாரத் துறை உதவி பொறியாளர் நம்மிடம் கூறுகையில், "தற்போது அந்தப் பகுதியில் மின்சாரத்துறை ஊழியர்கள் குறைவாக இருப்பதால் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இச்சம்பவம் தொடர்பாகக் காட்டுமன்னார்கோயில் சமூக ஆர்வலர் ஆரோக்கியசாமி கூறுகையில், ”கடந்த காலங்களிலே மின்சாரத்துறையில் இது போன்ற சம்பங்கள் நடந்துள்ளது.தற்போது அதுபோல தான் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள வாழைக்கொல்லையில் மின் கம்பிகளில் கல்லை கட்டி தொங்கவிடுவது நடந்து இருக்கிறது. இது தமிழகத்தில் விஞ்ஞான வளர்ச்சி என்றே கூற வேண்டும்” என்றார்.