திருச்சி: "மாமூல்" விவகாரத்தால் ரேஷன் கடைகளில் அரிசி சப்ளை பாதிப்பு - அதிகாரிகள் விளக்கம் என்ன?

முன்னறிவிப்பின்றி லாரிகளை கிடங்கில் நிறுத்துவதும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சங்க விதிகளுக்கு எதிரான செயல்
லாரிகளில் கொண்டு செல்லப்படும் அரிசி
லாரிகளில் கொண்டு செல்லப்படும் அரிசி

திருச்சி மாவட்டத்தில் திருச்சி, மணச்சநல்லூர், முசிறி, ஸ்ரீரங்கம், லால்குடி உள்ளிட்ட 7 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள் உள்ளன.

இதில், அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கூட்டுறவு ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டு பின்னர் மாவட்டம் முழுவதும் அனுப்பப்படும்.

திருச்சி மாவட்டத்தின் தேவைக்காக நெல் மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரவை செய்வதற்கு இங்குள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு வருகிறது.

பின்னர், அரவை செய்த அரிசி மூட்டைகள் திருச்சி மாவட்டத்திலுள்ள கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வது நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், நுகர்பொருள் வாணிபக் கழக நிறுவனத்தில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கூலித்தொகை ரூ.6 வழங்கப்பட்டு வருவதை ரூ.8 ஆக உயர்த்தி வழங்க கோரி கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காணுமாறு நவீன அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அவர்கள் "ஜூன் 10ம் தேதி முதல் நுகர்வோர் வாணிப கழக கிட்டங்கிகள் முன்பு லாரி டிரைவர்கள் தங்களது லாரியிலிருந்து அரிசி மூட்டைகளை இறக்கி வைக்க முடியாமல் காத்திருக்கிறார்கள்.

மேலும், லாரிகள் முடங்கி உள்ளதால் நவீன அரிசி ஆலைகளில் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, நுகர்வோர் வாணிப கழக கிட்டங்கிகளில் உள்ள அரிசியும் இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால், ரேஷன் கடைகளிலும் அரிசி சப்ளை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு லாரி டிரைவர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்" என்றனர்.

இதனிடையே, திருச்சி மாவட்ட அரவை முகவர்களின் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில், 'திருச்சி மண்டல கிடங்குகளில் அரவை முகவர்கள் அரவை செய்து வரும் அரிசியை இறக்குவதற்கு சுமைப்பணியாளர்கள் டன்னுக்கு ரூ.120-ல் இருந்து ரூ.200-ஆக உயர்த்தித் தர அரவை முகவர்கள் சங்கத்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர்.

அரசு கிடங்கில் பணியாற்றும் சுமை பணியாளர்கள் மாமூல் கோருவதும், பெறுவதும் அரசு விதிகளுக்கு எதிரானது. இப்பணிக்காக சுமை பணியாளர்கள் அரசு கொடுக்கும் கூலித்தொகையை பெற்றுக்கொண்டு ரூ.3 ஆயிரம் மாமூலாக பெற்று வருகின்றனர்.

தற்போது, இந்த மாமூலில் ரூ.2 ஆயிரம் சேர்த்து தற்போது ரூ.5 ஆயிரமாக மாமூலை உயர்த்தித் தரவேண்டுமென கோருவதும், அதற்கு எங்களை நிர்ப்பந்திப்பதும், முன்னறிவிப்பின்றி லாரிகளை கிடங்கில் நிறுத்துவதும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சங்க விதிகளுக்கு எதிரான செயலாகும்.

கிடங்குகளில் பணிபுரியும் சுமைப்பணியாளர்கள் ஒவ்வொரு வருடமும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரவை முகவர்கள் ஒப்படைக்கும் மூட்டைகளை இறக்குவதற்காக அரசு வழங்கும் கூலித் தொகையை பெற்றுக்கொண்டு, பேச்சுவார்த்தை மூலமாக சம்மதிக்கிறோம். ஆனால், தற்போது 25 டன்னுக்கு ரூ.5 ஆயிரம் மாமூல் கேட்டால் எங்களால் கொடுக்க இயலாது.

எனவே, சுமூகமான நிலைப்பாடு எட்டப்படும் வரை நெல் எடுப்பதையும், அரவை செய்வதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க சங்கம் முடிவு எடுத்துள்ளது' என ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, இந்த பிரச்னை குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

- திருச்சி ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com