திருவண்ணாமலை அருகே காவல் நிலைய செலவுக்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அருகில் கீழ் பளனந்தல் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேலின் மனைவிக்கும் சகோதரிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெற்றிவேலின் மனைவி பரிமளா திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி விசாரணையை முடித்து எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு காவல் நிலைய செலவிற்காக லஞ்சமாக ரூ.3 ஆயிரம் கேட்டதாக சொல்லப்படுகிறது.
குடும்பப் பிரச்னையில் மனஉளைச்சலில் இருந்த வெற்றிவேல் லஞ்ச பணம் கொடுக்க விருப்பம் இல்லாமல் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி வேல்முருகனிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இன்று திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி பணியில் இருக்கும்போது ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெற்றிவேல் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக பரமேஸ்வரியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் லஞ்சம் பெறும்போது கையும், களவுமாக பிடிபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.