திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மகாலட்சுமி. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் குடும்பத்துடன் சென்று வேலை செய்து வருகின்றனர்.
தம்பதியின் மகன் திவாகர் (12) திருப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தங்களது சொந்த ஊரான புத்துக்கோவில் பகுதியில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாவிற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ஊருக்கு வந்துள்ளனர்.
நேற்று திருவிழா முடிந்த நிலையில் இன்று தந்தை முருகன் மற்றும் உறவினர்களுடன் திவாகர் தமிழகம்-ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது திவாகர் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.
இதை பார்த்த தந்தை மற்றும் உறவினர்கள் திவாகரை மீட்டு ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் அங்கு டாக்டர் இல்லாததால் செவிலியர்களே சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர் அவர்களும் சிறுவனை காப்பாற்ற முடியாது என கூறியதால் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே திவாகர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர். இந்த காட்சி பார்ப்போரின் நெஞ்சை கலங்க செய்யும் விதமாகவே இருந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குப்பம் போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் ‘ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியர்களே தாமதமாக சிகிச்சை அளித்ததால்தான் மகன் இறந்துவிட்டதாக’ பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். தந்தையின் கண்முன்னே 12 வயது பள்ளி மாணவன் தடுப்பணை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.