திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அடுத்துள்ள அகிலாண்டபுரத்தில் வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.
இந்த நிலையில், அகிலாண்டபுரத்தை சேர்ந்த செழியன் மகன் மித்திரன், காட்டுராஜா மகன் சுரேஷ் ஆகிய இருவருக்கும் பரந்தாமன் மற்றும் அவரது நண்பர்களுக்கு இடையே இரவு நேரத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் திருடுவது தொடர்பாக கஞ்சா போதையில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பரந்தாமன் உள்ளிட்ட 4 பேருக்கும் மித்ரன், சுரேஷ் ஆகியோருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன், வேலு, பரந்தாமன், அப்பாஸ் ஆகிய 4 பேரும், சேர்ந்து சுரேஷ், மித்ரனை அரிவாளால் வெட்டிவிட்டு வீட்டின் உள்ளே அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். அதிக சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வர, ரவுடியிசத்தில் ஈடுபட்ட 5-க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடினர்.அப்படி ஓடியவர்கள் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி இருக்கிறார்கள்.
மேலும், அவ்வழியாக சென்ற தனியார் பேருந்தின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பியோடியதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த சுரேஷ், மித்ரன் ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் அப்பகுதியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இச்சம்பவம் குறித்து தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அசம்பாவித செயல்களில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிய குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அரிவாள் வெட்டு, வெடிகுண்டு வீச்சு, பேருந்து கண்ணாடி சேதம் என அடுத்தடுத்த சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட தாளக்குடி ஊராட்சியை சேர்ந்த புறா செல்வத்தின் மகன் மணிகண்டன், அங்கு மகன் வேலு, பங்கு சேகர் மகன் அப்பாஸ் மற்றும் கீரமங்கலத்தை சேர்ந்த காமராஜ் மகன் பரந்தாமன் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு, பரந்தாமன், நெப்போலியன், வேல்முருகன், மணிகண்டன், மோகன் குமார், சாந்தகுமார், ரஞ்சித் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.